டிரெண்டிங்

”அப்போ சிகரெட்; இப்போ சரக்கு” வியூஸ்க்காக போலீஸிடம் சிக்கிய INSTA பிரபலம்: யார் இந்த பாபி?

JananiGovindhan

சமூக வலைதளங்களில் இன்ஃப்ளூயன்சர்களாக இருக்கும் பலரும், வியூஸ்களுக்காக அவர்கள் செய்யும் சில சம்பவங்கள் அவர்களுக்கே எதிராக போய் முடிகிறது. அந்த வகையில்தான் டேராடூனில் நடு ரோட்டில் கிளாஸில் மது ஊற்றி குடிக்கும் வீடியோவால் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

ஹரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பாபி கட்டாரியா என்பவர் இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்களை கொண்ட இன்ஃப்ளூயன்சராக இருக்கிறார். பாடி பில்டரான பாபி இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ் போடுவது, தன்னுடைய ஆடம்பரமான வாழ்க்கை முறையை வீடியோவாக தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இப்படி இருக்கையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் உள்ள பகுதியில் நடு ரோட்டில் சேர் போட்டு சோடா ஊற்றி மது அருந்துவதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலானதோடு பலருக்கும் முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளதால் மாநில காவல்துறை டி.ஜி.பி அசோக் குமார் பாபி கட்டாரியா மீது விசாரணை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.

கடந்த ஜூலை 28ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை கண்ட பலரும் பாபி கட்டாரியாவின் செயலுக்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்திருக்கிறார்கள். அதனையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இதுப்போன்று பொது இடங்களில் பாபி கட்டாரியா சட்டத்தை மீறி செயல்படுவது முதல் முறையல்ல. கடந்த ஜனவரி 23ம் தேதி தூபாயில் இருந்து டெல்லிக்கு வந்த போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்தபடியே பாபி கட்டாரியா புகைப்பிடித்து அலப்பறை செய்ததும் சர்ச்சைக்குள்ளானது.

முன்னதாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் போதும், கட்டாரியாவின் செயல் சர்ச்சையை கிளப்பியது. நவ்பாரத் டைம்ஸ் செய்தி படி, குருகிராமில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குள் ஒரு ரகளையை ஏற்படுத்தியிருந்தார்.

இது அவரது கிராமத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக நடந்ததாகவும், அவர் மீது போலீசார் 6 வழக்குகளை பதிவு செய்து பின்னர் அவரை கைதும் செய்திருந்தனர். அப்போது காவலில் இருந்த தன்னை போலீசார் சித்திரவதை செய்ததாக பாபி கட்டாரியா குற்றஞ்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பதும் நினைவுக்கூரத்தக்கது.