ராகுலின் அபார சதத்தால் மும்பைக்கு எதிராக 168 ரன்கள் குவித்தது லக்னோ. தொடர்ந்து சொதப்பிய பொல்லார்டு இந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்தது மும்பைக்கு ஆறுதல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 7 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், பங்கேற்ற 7 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், 5 முறை சாம்பியனான மும்பை அணி தவித்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாளான இன்று நடைபெறும் போட்டியிலாவது மும்பை வெற்றிக் கணக்கை தொடங்குமா என மும்பை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். லக்னோ அணி தரப்பில் ஓப்பனர்களாக குயிண்டன் டி காக்குடன் கேஎல் ராகுல் களமிறங்கினார். ஆனால் துவக்கம் இந்த ஜோடிக்கு சிறப்பாக அமையவில்லை. ராகுல் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த, டி காக் பும்ரா பந்துவீச்சி சிக்கி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே ராகுலுக்கு பக்க பலமாக நிற்க ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது.
சிறப்பாக விளையாடத் துவங்கிய ராகுல் பவுண்டரிகள், சிக்ஸர்களாக விளாச, அணியின் ரன்ரேட் 8ஐ தொட்டவாறு பயணித்தது. பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்தார். தொடர்ந்து சொதப்பி வந்த பொல்லார்டு வீசிய பந்தில் மனிஷ் பாண்டே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் டக் அவுட் ஆக லக்னோ அணி தள்ளாடத் துவங்கியது. கேஎல் ராகுல் ஒரு பக்கம் தனியாளாக போராடிக் கொண்டிருக்க, க்ருனால் பாண்டியா பொல்லார்ட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார்.
தீபக் ஹூடாவும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட, தனியாளாக அணியை தாங்கத் துவங்கினார். பும்ரா, உனத்கட் ஓவர்களில் பவுண்டரிகளாக சிதறடிக்க ஸ்கோர் ஜெட் வேகத்தில் மீண்டும் எகிறத் துவங்கியது. அதிரடி காட்டிய ராகுல் 61 பந்துகளில் சதம் விளாசினார். இந்த சீசனில் ராகுல் விளாசும் 2வது சதம் இது. இரண்டும் மும்பைக்கு எதிராக விளாசியுள்ளார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது லக்னோ. 169 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடுகிறது மும்பை!