ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பெங்களூரு அணி 11 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.பிளே ஆஃப்-க்கான பந்தயம் பரபரப்பை பற்ற வைத்துள்ள சூழலில், இன்றைய போட்டியில் மோதவுள்ள பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து அறிவோம்.
டிவில்லியர்ஸின் மிரட்டலான ஆட்டத்தால் ராஜஸ்தானை வீழ்த்திய உத்வேகத்தில் உள்ளது பெங்களூரு அணி. துவக்க வீரர்கள் ஃபின்ச், படிக்கல் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தர தவறி வருவது அணிக்கு சிக்கலாக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஓபனிங் ஜோடி மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சராசரியான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக உள்ள டிவில்லியர்ஸ் அசத்தலான ஃபார்மில் உள்ளது அணிக்கு பெரும் பலமாக உள்ளது. துபே, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் மத்திய வரிசை நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். சுந்தர் மற்றும் மோரிஸ் பவுலிங்கிலும் வலுவான பங்களிப்பை நல்கி வருவது கூடுதல் பலம். பந்து வீச்சாளர்கள் சைனி, சிராஜ், உதானா ஆகியோர் வியக்கத்தக்க ஆட்டங்களைக் கொடுக்கத் தவறி வருவது அணிக்கு பின்னடைவே. முக்கிய கட்டங்களில் விக்கெட்டை வீழ்த்தும் சுழல் சூத்திரதாரி சாஹல் மிடில் ஓவர்களில் நம்பிக்கையளிக்கிறார்.
ஹைதராபாத்துக்கு எதிராக சூப்பர் ஓவர் வெற்றியைப் பதிவு செய்து புத்துணர்ச்சி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. நிரந்தரமான தொடக்க வீரர்கள் இல்லாதது அணிக்கு உள்ள பெரும் சிக்கல். மேல்வரிசையில் கில், ராணா மற்றும் திரிபாதி ஓரளவு ஆறுதல் அளிக்கின்றனர். முன்னாள் இந்நாள் கேப்டன்களான தினேஷ் கார்த்திக் மற்றும் இயான் மார்கன் மத்திய வரிசை தூண்களாக உருவெடுத்துள்ளனர். அதிரடி மன்னன் ரசல் நடப்பு சீசனில் ஒரு முறை கூட பெரிய ஸ்கோரை எட்டாமல் இருப்பது அணிக்கு பலவீனம்.
பந்துவீச்சைப் பொருத்தவரையில் அறிமுகமான முதல் போட்டியிலேயே எதிரணியினரை மிரள வைத்த பெர்கியூசன் அணிக்கு அசுர பலமாக உருவெடுத்துள்ளார். பாட் கம்மின்ஸ், பேட்டிங்கிலும் சராசரியான பங்களிப்பை கொடுத்து வருவது கூடுதல் பலம். ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும் சராசரியான ஃபார்மில் உள்ளனர். ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சிற்கு பக்கபலம்.
மிரள வைக்கும் பெர்கியூசனின் வேக யார்க்கர்களுக்கும், மைதானத்தின் அனைத்து கோணங்களிலும் திணறடிக்கும் டிவில்லியர்ஸின் அதிரடிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் வெல்லப் போவது யார் என்பதே இன்றைய போட்டியின் மீதான உச்சபட்ச எதிர்பார்ப்பு.