ஐபிஎல் டி20 தொடரின் இன்றையப் போட்டியில் டெல்லி - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணியும் மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் அபுதாபியில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் களம்காண்கின்றன.
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி அணி, அதில் 7-இல் வென்று 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்குகிறது.
டெல்லி அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரையில் தொடக்க வீரா் ஷிகா் தவன் கடந்த இரு ஆட்டங்களிலும் தொடா்ச்சியாக இரு சதங்களை விளாசி, ஐபிஎல் வரலாற்றில் தொடா்ச்சியாக இரு சதங்களை விளாசியவா் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகா் தவன் சதமடித்தபோதிலும், எஞ்சிய பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்காததால் தோல்வி ஏற்பட்டது . குறிப்பாக, அந்த அணியின் தொடக்க வீரா் பிரித்வி ஷா கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களில் இரண்டில் டக் அவுட்டாகியுள்ளார்.
எனவே, அவா் இந்த ஆட்டத்தில் ஷிகா் தவனுடன் இணைந்து நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது முக்கியமாகும். இதேபோல் மிடில் ஆா்டரில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பன்ட், ஸ்டொய்னிஸ், ஷிம்ரோன் ஹெட்மயா் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவித்தால் மட்டுமே டெல்லி அணி வலுவான ஸ்கோரை குவிக்க முடியும். டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சைப் பொருத்தவரையில் ரபாடாவுடன் இணைந்து சிறப்பாக பந்துவீசி வந்த அன்ரிச் நோர்ஜே காயம் காரணமாக பஞ்சாபுக்கு எதிராக விளையாடவில்லை. அவா் இந்த ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்துவீச்சில் அக்சர் படேல், அஸ்வின் கூட்டணி டெல்லிக்கு பலம் சோ்க்கிறது. கொல்கத்தா அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவா்களில் யாரும் தொடா்ச்சியாக சிறப்பாக ஆடி ரன் குவிக்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி கண்டது கொல்கத்தா. அதிலிருந்து மீண்டு இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும்.
எனவே, சுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், கேப்டன் இயோன் மார்கன் ஆகியோர் சிறப்பாக விளையாடி ரன் குவிப்பது முக்கியமானதாகும். வேகப்பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், பெர்குசன் கூட்டணியையும், சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவா்த்தியையும் நம்பியுள்ளது கொல்கத்தா.