கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போஸ்டர் ஒன்றில் வடகொரிய அதிபர் கிம்-ஜாங்-உன் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இடுக்கி மாவட்டம் நெடும்கண்டம் பகுதியில் டிசம்பர் 16-17 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் கட்சி உறுப்பினர்களை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் கிம் ஜாங்கின் படம் இருந்தது. வழக்கமாக மார்க்சிஸ்ட் கட்சியின் போஸ்டர்களில் மார்க்ஸ், லெனின் படங்கள் தான் இருக்கும். முதல் முறையாக கிம் ஜாங்-உன் படம் இடம்பெற்றுள்ளது.
கட்சியின் உள்ளூர் உறுப்பினர்கள் தவறுதலாக படத்தை வைத்திருக்காலம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், கிம் ஜாங்கின் படத்தை அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வடகொரிய அதிபர் படம் மார்க்சிஸ்ட் கட்சி போஸ்டரில் இடம்பெற்றுள்ளதை அம்மாநில பாஜகவினர் விமர்சித்துள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா தனது ட்விட்டரில், “கிம் ஜாங் உன் அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது போல், மார்க்சிஸ்ட் கட்சி பாஜக, ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தாது என்று நம்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பத்ரா கூறுகையில், “இந்த போஸ்டர் தவறுதலாக இடம் பெற்றதல்ல, இது இடதுசாரிகளின் மனநிலையை பிரதிபலிக்கிறது. மேலும் அவர்களின் சகிப்புத்தன்மையற்ற படையை காட்டுகிறது” என்றார்.