டிரெண்டிங்

“சுந்தர் சி கொடுத்த அழுத்தத்தாலேயே குஷ்பு பாஜகவில் இணையலாம்”-கோபண்ணா

“சுந்தர் சி கொடுத்த அழுத்தத்தாலேயே குஷ்பு பாஜகவில் இணையலாம்”-கோபண்ணா

webteam

குஷ்பு பாஜகவில் சேர அவரது கணவர் சுந்தர்.சி தான் காரணம் என காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்பாளர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் அந்த பணியை அவர் சிறப்பாகவே செய்து வந்தார். கொள்கை ரீதியாகவே காங்கிரஸின் கொள்கையை எடுத்து சொல்வதிலும், பாஜகவின் மோடி, அமித்ஷாவின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும், கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

பாஜகவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வந்தார். பாஜகவும் காங்கிரஸும் கொள்கை ரீதியாக வெவ்வேறானவை. குஷ்பு காங்கிரஸ் கொள்கையை கடைபிடித்து வந்தார். 1925 ஆம் ஆண்டில் இருந்து இந்த கொள்கை போர் நடக்கிறது.

இதைவிட உயர்பதவி எதுவும் கொடுக்க முடியாது. சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடுகளை குறைத்துக்கொண்டார். திரைப்பட சம்பந்தமான பணிகள் இருப்பதால் கட்சி நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. நாங்கள் அழைத்தாலும் கூட வெளிநாட்டில் இருப்பார். அல்லது படப்பிடிப்பில் இருப்பார். ஏதோ ஒரு வகையில் அவரின் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பிறகு அவர் பாஜகவில் சேரப்போவதாக செய்தியும் வந்தது. அவரது கணவர் சுந்தர்.சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே பாஜகவில் சேர்கிறார்.

இதுவரை சுந்தர்.சி அரசியலில் தலையிடவில்லை. ஆனால் இந்த முறை பாஜகவில் சேருவதற்கும், அதிமுகவில் நல்ல உறவை ஏற்படுத்துவதற்கும் அவரின் ஆலோசனைப்படியே குஷ்பு இந்த முடிவை எடுத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.குஷ்புவை பொருத்தவரை காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மட்டுமே கடைபிடித்தார்.

சமீபத்தில் கூட பெரம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். யாரையும் வெளியே அனுப்ப காங்கிரஸ் நினைக்கவில்லை. எல்.முருகனுடன் சுந்தர்சி ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினார். திரைமறைவுக்கு பின்னால் பாஜக சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்கு சுந்தர்சி இறையாகியிருக்கிறார். இதன் விளைவு பாஜகவில் குஷ்பு சேர்கிறார்.

பாஜகவில் சேருவது குறித்து கடுமையாக என்னிடம் மறுப்பு தெரிவித்தார் குஷ்பு. கணவரின் நிர்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். மனதார இதை அவர் செய்திருக்க மாட்டார். பாஜகவை பற்றி இவர் பேசியதையெல்லாம் அடகுவைத்துவிட்டு காங்கிரஸ் கொள்கையை விட்டுக்கொடுத்துவிட்டு, நேர் எதிரான கொள்கைக்கு பலியாகியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.