சபாநாயகராக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான போபையா மீண்டும் தாற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து பாஜக எம்.எல்.ஏ கேஜி.போபையா தாற்காலிக சபாநாயகராக ஆளுநரால் நியமிக்கப்பட்டுளார். உடனடியாக சபாநாயகராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். கே.ஜி.போபையா பாஜக சார்பில் இதுவரை மூன்று முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில், 2009ம் ஆண்டு முதல் 2013 வரை கர்நாடக சட்டசபை சபாநாயகராக இருந்தவர். கர்நாடகாவின் விராஜ்பத் தொகுதியைச் சேர்ந்த கே.ஜி.போபையா, இளவயது முதல் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார் அமைப்புகளில் தொடர்புடையவர். 1990 இல் பா.ஜ.க. மாவட்ட தலைவராகவும், 2004, 2008இல் பாஜக எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர்.
கே.ஜி.போபையா எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு உரிய நபராக அறியப்படுகிறார். பாஜக ஆட்சியில் இருந்த போது 2010ம் ஆண்டு சட்டவிரோத சுரங்க ஊழல் விவகாரம் வெடித்தது. அப்போது பாஜக எம்.எல்.ஏக்கள் சிலர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை எடியூரப்பா அரசுக்கு ஏற்பட்டது.
நெருக்கடியான அந்த சூழலில் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.எல்.ஏக்கள் 11 பேர், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் 5 பேரையும் தகுதி நீக்கம் செய்து, அப்போது சபாநாயகராக இருந்த கே.ஜி.போபையா அதிரடியாக உத்தரவிட்டார். இதனால், அப்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி தப்பித்தது. தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, போபையாவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் நீதிபதிகள். போபையாவின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி அல்தமாஸ் கபிர் தலைமையிலான நீதிபதிகள் சிரியாக் ஜோசப் தலைமையிலான அமர்வு, எடியூரப்பா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் மீது இவ்வளவு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருக்க கூடாது என்று தெரிவித்தனர். சபாநாயகரின் நடவடிக்கை அதீத அவசரத்தில், தேவையற்ற வேகத்தில், ஒரு தலைபட்சமாக எடுக்கப்பட்ட முடிவு என நீதிமன்றம் கண்டனத்தில் தெரிவித்தது.
சபாநாயகராக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான ஒருவர் மீண்டும் சபாநாயகராக நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. அதேபோல், முன்னதாக தலா 8 முறை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உமேஷ் கர்தி ஆகியோரின் பெயர்கள் தான் சபாநாயகர் பெயருக்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் போபையாவை சபாநாயகராக நியமித்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் மூத்த உறுப்பினரை சபாநாயகராக நியமிப்பது கடைபிடிக்கும் வழிமுறை. பெரும்பாலும் மூத்த சட்டமன்ற உறுப்பினர்களில் யாரேனும் ஒருவரை தான் நியமிக்கும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.