மதம்பிடித்த யானை புதியதலைமுறை
டிரெண்டிங்

கேரளா | மலப்புரம் திருவிழாவில் மிரண்டு ஓடி தாக்கிய யானை.. ஒருவரை தூக்கி எறிந்ததால் பரபரப்பு

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில் வருடாந்திர திருவிழாவின் போது நேற்றிரவு ஒரு யானை மிரண்டு ஓடி தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

Jayashree A

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது யானை ஒன்று மிரண்டு ஓடி தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

சமீபகாலமாக கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு மிரண்டு மனிதர்களை தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. சிலமாதங்களுக்கு முன் திருச்செந்தூரில் வளர்க்கப்பட்ட தெய்வானை என்ற யானை தாக்கி பாகனும், பாகனின் உறவினரும் உயிரிழந்தது நினைவிருக்கலாம். அதைத்தொடர்ந்து தெய்வானை யானை முகாமிற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு கேரளா மலப்புரத்தில் நடைப்பெற்ற ஒரு திருவிழாவின் போது கோவில் யானை மிரண்டு ஓடிய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.

நடந்தது என்ன?

கேரளா அடுத்த திரூரில் நேற்றிரவு நடந்த புதியங்கடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இந்த திருவிழாவில் குறைந்தபட்சம் ஐந்து யானைகள் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டு அவை ஊர்வலமாக வந்துக்கொண்டு வரப்பட்டன. அதில் திடீரென்று, ஸ்ரீகுட்டன் என்ற பெயர்கொண்ட யானை கூட்டத்தினரைப்பார்த்து பிளிரி கூட்டத்தில் உள்ள ஒருவரை தனது துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. இதில், அவர் கவலைக்கிடமான முறையில் கொட்டக்கலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அச்சமயத்தில் கூட்டத்தினரிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக குறைந்தது 17 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆக்ரோஷமான யானையை கட்டுக்குள் கொண்டுவர சுமார் இரண்டு மணி நேரம் ஆனதாக தகவல் வெளியாகி இருக்கிறது.