டிரெண்டிங்

கேரள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

கேரள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி

rajakannan

கேரள மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முக்கிய எதிர்க்கட்சியாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளது. மலப்புரம் மாவட்டம் வேங்கரை சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் குன்ஹல்லி குட்டா தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அதனையடுத்து அந்தத் தொகுதிக்கு அக்டோபர் 11-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

இதில், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட கே.என்.எஸ்.காதர் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவருக்கு மொத்தம் 65,227 வாக்குகள் கிடைத்தது. ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பஷீருக்கு இரண்டாம் இடம்தான் கிடைத்தது. அவருக்கு 41,917 வாக்குகள் கிடைத்தது. மூன்றாம் இடம் பிடித்த எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளருக்கு 8648 வாக்குகள் கிடைத்தது. மத்தியில் ஆளும் பாஜக வேட்பாளருக்கு 5,728 வாக்குகள் தான் கிடைத்தது. 

கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி இரண்டாம் இடத்தை பிடித்த போதும், கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமாகவே அக்கட்சியின் வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குன்ஹல் குட்டிக்கு 73,804 வாக்குகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளார் பாய்சல்க்கு 33,275 வாக்குகளும் கிடைத்தன. பாஜக வேட்பாளருக்கு முந்தையை தேர்தலைவிட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு முந்தைய தேர்தலை விட அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.