டிரெண்டிங்

கரூர்: கருத்துக் கணிப்பு நடத்தியவர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதாக புகார்

kaleelrahman

கரூரில் தேர்தல் கருத்துக் கணிப்பு பணியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த பீப்புள்ஸ் டேட்டா ஃபேக்டரி என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தி செல்போனை பறித்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து புகார் அளித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த புகாரை வாங்க மறுத்து விட்டார் எனத் தெரிகிறது.

சென்னை பீப்புள்ஸ் டேட்டா ஃபேக்டரியை சேர்ந்த தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனம், நேற்று கரூரில் கருத்துக் கணிப்பை நடத்தியது. பெரிய காளிபாளையம் பகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரையில் இருந்தபோது அந்த பகுதியில் இந்த நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது.

அப்போது கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்கள் போக்குவரத்து அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரின் தேர்தல் பரப்புரையை செல்போன் மூலம் படம் பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த அதிமுக பிரமுகர் கோவர்தன் என்பவர் கருத்துக் கணிப்பு நடத்தியவர்களை தாக்கி செல்போனை பறித்து சென்றுள்ளார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாங்கல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு பல மணிநேரம் காத்திருந்தும் செல்போனை பெற்று தராமல் தாக்கிய அதிமுக பிரமுகர் கோவர்த்தனிடமே செல்போனை போலீசார் திருப்பி கொடுத்துள்ளர். இந்நிலையில் இது குறித்து டேட்டா ஃபேக்டரி இயக்குனர் பாலமுருகன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரனிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், கருத்துக்கணிப்பு நடத்திய நிறுவன ஊழியர்கள் மீது அதிமுகவைச் சேர்ந்த கோவர்தன் தலைமையில் பலர் தாக்குதல் நடத்தி உள்ளனர். மேலும் செல்போனையும் பறித்து உள்ளனர். அவர்கள் செல்போனை திருப்பித் தரக்கோரி வாங்கல் காவல் நிலையத்தை பலமுறை தொடர்பு கொண்டும் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் புகார் மனுவை வாங்க மறுத்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம். அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நிறுவனத்தினர் அதிமுகவினர் மீதும், புகாரை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் மீதும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக கூறிவிட்டு சென்றனர்.