டிரெண்டிங்

கரூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைப்பேன்?: ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சி‌யர் கூறினாரா?

கரூரில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரைப்பேன்?: ஜோதிமணியிடம் மாவட்ட ஆட்சி‌யர் கூறினாரா?

Rasus

கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்ய பரிந்துரைப்பேன் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் அத்தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி, வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னை நேரில் மிரட்டியதாக காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். அதன்படி காங்கிரஸ்‌ நிர்வாகிகள் உள்‌ப‌ட 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் இதுதொடர்பாக செல்போனில் பேசும் உரையாடல் வெளியாகியுள்ளது. அதில் கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய ‌பரிந்துரை செய்வேன் என மாவட்ட ஆட்சியர் கூறுவதும், அதற்கு ஜோதிமணி எதிர்ப்பு தெரிவிப்பதும் பதிவாகியுள்ளது.

உரையாடல் விவரம்

ஜோதிமணி : 10 பேர் புகா‌ர் அளிக்க வந்தால் அனு‌மதியின்றி கூடியதாக ஆகுமா? வெளிப்படையாக மிரட்டல் விடுக்கும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் எங்கள் மீது நடவடிக்கையா?

ஆட்சியர் அன்பழ‌ன் : மிரட்டல் விடுத்த அனைத்தையும் பதிவு செய்து வைத்துள்ளேன். கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன்.

ஜோதிமணி: தேர்தல் நடத்தும் ‌அதிகாரி தேர்தலை ரத்து செய்வது குறித்து பேசலாமா?

ஆட்சியர் அன்பழகன்: உங்கள் தரப்பினர் எனக்கு மிரட்டல் விடுக்கின்றனர்.

ஜோதிமணி : சுமார் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் தரப்பினர் பரப்புரையில் ஈடுபட்டோம். ஆனால் தேர்தல் ரத்து செய்வது குறித்து கூறுவது ‌ஏன்?

இவ்வாறாக அந்த ஆடியோவில் உரையாடல் தொடர்கிறது.