டிரெண்டிங்

மெரினாவில் ஜேசிபி எந்திரம்: கருணாநிதி குறித்த வதந்தியில் உண்மையில்லை

மெரினாவில் ஜேசிபி எந்திரம்: கருணாநிதி குறித்த வதந்தியில் உண்மையில்லை

webteam

மெரினாவை, ராஜாஜி ஹாலை தொடர்புபடுத்தி கருணாநிதி உடல்நிலை குறித்து வெளியாகும் செய்தி மற்றும் புகைப்படங்கள் எவையும் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.

பலமுறை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விளக்கம் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அவரை பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை குறிப்பிட்டு ‘சில விஷமிகள் திட்டமிட்டு வதந்திகளை பரப்புகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம்’என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கூட ‘தலைவர் நலமாக இருக்கிறார். விரைவில் பூரண குணமடைவார்’என்று கூறியிருக்கிறார். ஆனாலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகும் வதந்திகள் நின்றபாடில்லை. 

இந்நிலையில் மெரினாவில் ஜேசிபி எந்திரம் மூலம் இடங்களை தூய்மை செய்வதாகவும் ராஜாஜி ஹாலில் சில பணிகள் நடைபெறுவதாகவும் வதந்தி பரவி வருகிறது. ஆனால் அந்தப் பணிகள் சம்பந்தமாக விளக்கம் தரப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கான பணிகள் மெரினாவில் நடைபெற்று வருகின்றன. ஆகவே அதற்காக சில நாட்களாகவே ஜேசிபி எந்திரம் அங்கே நிறுத்தப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் எடுத்துப்போட்டு சிலர் கருணாநிதிக்கு எதிராக வதந்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

அதே போல் ராஜாஜி ஹாலில் திடீரென்று சில விளக்குகள் எரியவில்லை. அந்த விளக்குகளை சரி செய்வதற்கான வேலைகளில்  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவும் வழக்கமான நடைமுறைதான். அந்தப் படங்களை எடுத்து போட்டு, அதனுடன் கருணாநிதி உடல்நிலை சம்பந்தப்படுத்தி சிலர் வதந்திகள் பரப்பி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.  

இதை போன்ற புகைப்படங்கள் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று தெரிய வந்துள்ளது.