டிரெண்டிங்

வேலூர் இடைத்தேர்தலுக்கு முன் இந்த ஞானம் ஏன் வரவில்லை?: துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

வேலூர் இடைத்தேர்தலுக்கு முன் இந்த ஞானம் ஏன் வரவில்லை?: துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

webteam

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை? என்று துரைமுருகனுக்கு சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது தமிழக காங்கிரஸ் சார்பில் வெளியான அறிக்கை திமுக - காங்கிரஸ் கூட்டணி உறவில் சலசலைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற சிஏஏ தொடர்பான ஆலோசனை கூட்டத்தை திமுக புறக்கணித்தது. பின்னர், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் பேட்டி மேலும் அதனை உறுதி செய்தது.

இந்த நிலையில்தான் தங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று காலை கூறியிருந்தார். அப்போது பேசிய அவர், “எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டிஆர் பாலு கூறினார். நான் பதிலே சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “தற்போது கூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். எனது கருத்தால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சியில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் துரைமுருகன் பேசிய வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கார்த்தி சிதம்பரம், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை? என்று துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.