உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதை இந்தியாவில் உள்ளவர்கள் பெருமைபட சொல்லிக் கொள்வது உண்டு. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது நாட்டில் உள்ளது ஜனநாயகமா? அல்லது பண நாயகமா? என்று மக்கள் வேதனையுடன் கேட்கிறார்கள். கர்நாடகத் தேர்தலை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தின் ஆதரவாளர்கள் உண்மையில் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகத் தேர்தலில் நடைபெற்று கொண்டிருப்பதை தனித்து பார்க்க முடியாது. ஒட்டுமொத்த இந்திய ஜனநாயகம் சீரழிவின் உச்சத்தை அடைந்துள்ளதாகதான் தோன்றுகிறது என பலரும் பதட்டமாகப் பேசி வருகின்றனர்.
நாட்டிலேயே தேர்தலின் போது அதிக பணம் செலவிடப்படுவது தமிழகத்தில்தான் என முன்பு விமர்சனம் முன் வைக்கப்பட்டது. அதற்கு உதாரணமாக திருமங்கலம் பார்மூலா, ஆர்.கே.நகர் பார்மூலா என்பதை முன் வைத்தார்கள். ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தல் இவற்றை எல்லாம் முறியடித்துவிட்டது. தொடக்கம் முதலே கர்நாடகத் தேர்தல் பணம் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. சில இடங்களில் பணமும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கர்நாடகத் தேர்தலையொட்டி நாட்டின் பல இடங்களில் ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் முடங்கியது. இவையெல்லாம் கர்நாடகத் தேர்தலுக்காக பதுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
ஒரு திருவிழாவைப் போல் இரண்டு வாரங்கள் தேர்தல் காலம் ஜோராக சென்ற நிலையில், கோடிக்கணக்கில் பணம் விளையாடியதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தது. தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களில் 97 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதாவது, 222 தொகுதிகளில் 221 பேர் வெற்றிப் பெற்ற நிலையில், அதில் 215 பேர் கோடீஸ்வரர்கள். அப்படியென்றால் தேர்தலில் கோடீஸ்வரர்கள்தான் வெற்றிப் பெற முடியுமா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
வெற்றிப் பெற்ற எம்.எல்.ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ34.59 கோடி. 2008ம் ஆண்டு ரூ.10.05 கோடி சராசரியாக இருந்தது. மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களின் சொத்துமதிப்பு கடந்த முறையை விட 90 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற ஆய்வு நிறுவனம் வேட்பு மனுவில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தேர்தலுக்கு பின்பும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்தது குதிரை பேரத்திற்கு வழிவகுத்தது. பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37 மற்றவை 3 இடங்களை பிடித்தனர். அதனால், தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தது முதல் குதிரை பேரம் குறித்த செய்திகள் வெளியாக தொடங்கியது. மஜத உடன் காங்கிரஸ் கை கோர்த்த போதும், ஆளுநர் அழைப்பின் பேரில் எடியூரப்பா முதலமைச்சரானார். தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் தற்போது எடியூரப்பா ராஜினாமா செய்த இந்தத் தருணம் வரை கடந்த சில தினங்களில் பணம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பதை உறுதி செய்யும் வகையில் அத்தனை, அத்தனை செய்திகள் வெளியானது. நூறு கோடி, 150 கோடி என எல்லாமே கோடிகளில் தான் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் எத்தனை ஆயிரம் கோடிகள் இந்த தேர்தலில் மொத்தமாக புலங்கியிருக்கும் என்று நினைத்தால், அதிர்ச்சி தான் மிஞ்சும்.