பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் Twitter
டிரெண்டிங்

பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தை கோமியம் கொண்டு கழுவிய கல்லூரி மாணவர்கள்! நடந்தது என்ன?

PT WEB

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, இந்தி என பல மொழிகளிலும் தனது தனித்த நடிப்பு திறமையால் பிரபலமானவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் நேற்று (ஆகஸ்ட் 8) கர்நாடக மாநிலத்தில் உள்ள சர் எம் விஸ்வேஸ்வரய்யா கலை மற்றும் வணிகக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் “Dialogue on theater, cinema and society" என்ற தலைப்பில் பேசுவதற்காக சிறப்பு அழைப்பாளராக சென்றுள்ளார்.

பிரகாஷ் ராஜ்

இந்த நிகழ்ச்சியானது மாணவர்களின்றி தனியார் சார்பில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த மாணவர்கள் இதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இவர் பேசி முடித்து சென்ற பிறகு மாட்டின் கோமியம் கொண்டு அங்கே சுத்தம் செய்துள்ளனர்.

இதற்கிடையே நிகழ்ச்சியின்போது, வெளியே இருந்து போராட்டக்காரர்கள் உள்ளே வராமல் தடுக்க, தடுப்புகள் வைத்து போலீஸ் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளது. இதில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவமொக்கா காவல் கண்காணிப்பாளர், “போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது வெளியாட்களும் இருந்தனர். வெளியாட்கள் எனக் கூறப்பட்டவர்கள் ஏதேனும் குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதுமட்டுமல்லாது பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மபிரசாத், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ‘பிரகாஷ் ராஜ் மாணவர்களுக்கு என்ன கற்பிக்க முடியும்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்” என்றுள்ளார்.

இதற்கு முன் 2018 அன்று ராகவேந்திர மடத்திற்கு அவர் சென்ற போது இதேபோல் அவர் நின்றிருந்த ஆடிட்டோரியத்தை பசுவின் கோமியம் கொண்டு கழுவினர்.

- Jenetta Roseline S