224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையொட்டி வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்டப் பணிகள் விருவிருப்பாக நடந்து வருகிறது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. ஜெய்நகர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால், அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 223 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. நாளை நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்தத் தேர்தலில் வாக்களிக்க நான்கு கோடியே 96 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்குப்பதிவுக்கென சுமார் 56 ஆயிரத்து 600 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த தொகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படவிருக்கிறது. தேர்தலில் மொத்தம் 2 ஆயிரத்து 655 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்ய ஒன்றரை லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய துணை ராணுவப் படையினர் ஆவர். கர்நாடக தேர்தல் முடிவுகள் வரும் 15ஆம் தேதி வெளியாகும்.
இதனிடையே, தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று இரண்டு தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல் தெரியவந்துள்ளது.