கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகளை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்கள் பதிவிட்டு வருகின்றனர்.
கர்நாடக தேர்தலில் எதிர்பார்ப்புகளை தாண்டி பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நேற்று காலை முதல் மாலை வரை முடிவுகள் மாறிக் கொண்டே வந்தன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி இருந்தது. ஆனால், சில சுற்றுகளிலேயே நிலைமை மாறியது. பாஜக முன்னிலை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. காங்கிரஸ் பின்னடைவை சந்தித்தது. ஒரு கட்டத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு 120 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றது. அதனால், பாஜக வெற்றி பெற்றுவிட்டதாக கருதி தொண்டர்களும், தலைவர்களும் கொண்டாட்டத்தில் மூழ்கினர். ஆனால், மதியம் 2 மணிக்கு மேல் நிலைமை மெல்ல, மெல்ல மாறத் தொடங்கியது. பாஜகவிற்கு இறங்கு முகமும், காங்கிரஸ் கட்சிக்கு ஏறுமுகமும் இருந்தது. இறுதியில், பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 38 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எதிர்பாராத திருப்பமாக காங்கிரஸ் கட்சி, மஜதவுக்கு ஆதரவு அளித்தது. முதலமைச்சர் பதவியையும் விட்டுக் கொடுத்து நிபந்தனையின்றி ஆதரவு அளித்தது.
நேற்றைய அரசியல் நிகழ்வுகளை நெட்டிசன் விட்டு வைக்கவில்லை. மீம்ஸ்களாக போட்டு தேர்தல் முடிவுகளை கலாய்த்தனர். மூன்றாம் இடம் பிடித்த குமாரசாமிக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் நிலை உருவானது, முதலிடம் பிடித்த எடியூரப்பா ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது என அனைத்தையும் குறித்து மீம்ஸ்கள் பறந்தன.