யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் கர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
கர்நாடகத் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, “பாஜக மீது நம்பிக்கை வைத்துதான், கர்நாடக மக்கள் அதிக இடங்களை அளித்தனர். கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் ஆட்சியமைக்கும் அனைத்து உரிமையும் பாஜகவுக்கு உள்ளது. ஜனநாயகத்தை நாங்கள் எந்த விதத்திலும் மீறவில்லை; தார்மீக அடிப்படையிலேயே ஆட்சி அமைக்க உரிமை கோரினோம். குதிரை பேரத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியடைந்தும், முதலமைச்சரே ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தும் காங்கிரஸ் எதை கொண்டாடுகிறது ?. கர்நாடக தேர்தல் மூலம், காங்கிரஸ் கட்சி தனது சுயமரியாதையை இழந்துவிட்டது. காங்கிரஸ் - மஜத சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து மக்களின் விரோதப்போக்கை கடைபிடிக்கின்றன; இந்தக் கூட்டணி நிலையான ஒன்றாக இருக்காது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். சாதி, மத அடிப்படையில் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சி முயற்சித்தது” என்று கூறினார்.