கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சங்கர், நாகேஷ் என்ற இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ரமேஷ் ஜர்கிஹோலி, நாகேந்திரா, உமேஷ் ஜாதவ் மற்றும் மகேஷ் குமதஹல்லி ஆகிய 4 எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இது மஜத தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
சொகுசு விடுதியில் காங். எம்.எல்.ஏக்கள்:
இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவுக்கு தாவ உள்ளதாகவும், அவர்களிடம் ரிசார்ட்டில் வைத்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. வெள்ளிக்கிழமை(ஜன.19) நடத்தப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் சனிக்கிழமை ஒன்றாக தங்கியிருந்தனர். பாஜக தரப்பில் அவர்களுடன் பேரம் பேசப்படுவதாக செய்திகள் வெளியானது.
எம்.எல்.ஏக்களுக்குள் கைகலப்பு?
சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்கள் இடையே கடந்த சனிக்கிழமை கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த மோதலின் போது, ஆனந்த் சிங் என்ற எம்எல்ஏவை, கே.என்.கணேஷ் என்ற எம்எல்ஏ தாக்கியதாகவும் அதில் காயமடைந்த ஆனந்த் சிங் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், நெஞ்சுவலி காரணமாகவே ஆனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சுரேஷ் தெரிவித்து இருந்தார். ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகி வருவதாகவும், எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத 4 பேருக்கும் விளக்கம் கேட்டு கட்சி தலைமை சார்பில் நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கட்சியின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில், ஏன் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு மீண்டும் அழைப்பு:
மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான சித்தராமையா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இன்று காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருந்தார். குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அனைத்து எம்.எல்.ஏக்களையும் கொண்டு இந்தக் கூட்டம் நடைபெறும் என கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அதிருப்தி எம்.எல்.ஏக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால், எம்.எல்.ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடிவுக்கு வருகிறதா கர்நாடக காங். எம்.எல்.ஏக்கள் குழப்பம்?
சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் இடையே கைகலப்பு என்ற செய்தி வெளியானதை அடுத்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அங்கு படையெடுத்தனர். குறிப்பாக ஆனந்த் சிங் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு மூத்த தலைவர்கள் பலரும் சென்றனர். பிரச்னை ஏதும் இல்லையென செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.
சொகுசு விடுதியில் தங்கியிருந்த அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்கள் அனைவரும் அவரவர் தொகுதிகளுக்கு செல்வார்கள் என்றும் அக்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால், பிரச்னை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
கர்நாடக சட்டசபை நிலவரம்:-
காங்கிரஸ் + மஜத + பகுஜன் சமாஜ் = 117
பாஜக + சுயேட்சைகள் = 106
பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை = 113