தங்களின் ஆலோசனைபடியே பொதுச் செயலாளர் தனிஷ் அலி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்ததாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு அணித்தாவல் நிகழ்வுகளும் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட அதிக அளவில் அணி மாறி வருகின்றனர்.
இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் தனிஷ் அலி இன்று பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளார். லக்னோவில் உள்ள பகுஜன் சமாஜ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சதிஷ் மிஷ்ரா முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. மேற்கு உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா தொகுதியில் தனிஷ் அலி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில், பகுஜன் சமாஜ் கூட்டணியில் உள்ளது. அப்படியிருக்கையில், கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள தனிஷ் அலி, கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியில் இணைந்தது கேள்வியை எழுப்பியது.
இந்நிலையில், தனிஷ் அலி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தது குறித்து குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மஜத கட்சியின் பொதுச் செயலாளரான தனிஷ் அலி என்னுடனும், எங்களுடைய தேசிய தலைவர் தேவ கௌடாவுடனும் ஆலோசனை செய்த பிறகே பகுஜன்சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளார்.
இது முழுவதும் இருகட்சிகளுக்கு இடையிலான அரசியல் ஏற்பாடுதான். இது, மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறுவதற்காக மஜத மற்றும் பிஎஸ்பி கட்சிகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் முடிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகாவில் மஜத கூட்டணியில் இடம்பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.