கர்நாடக சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூடும் என ஆளுநர் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசு நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தவிரவிட்டுள்ளது. இதனால் கடந்த சில நாள்களாக பரபரப்பாக இருந்த கர்நாடகாவின் அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து சட்டசபை நடைபெற தாற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நியமித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை நாளை காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர். பதவியேற்புக்கு பின்னர் மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இதனிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக காவல் ஆணையர் நீலமணி ராஜு கூறியுள்ளார். வாக்கெடுப்பின் போது வெளியே சில அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்புள்ளதால் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.