டிரெண்டிங்

‘விவாதம் முடியும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை’ - கர்நாடக சபாநாயகர் 

rajakannan

ஆளுநர் அறிவுறுத்தியபடி கர்நாடக சட்டப்பேரவையில், மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

கர்நாடக சட்டப்பேரவையில், தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதலமைச்சர் குமாரசாமி நேற்று கொண்டு வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முதல்வர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் கடிதம் எழுதினார்.

அதனையடுத்து, இரண்டாவது நாளாக இன்று கர்நாடக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. முதல்வர் குமாரசாமி அவையில் பேசினார். ஆளுநரின் அறிவுறுத்தலின்படி நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தக் கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், விவாதம் முடியும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் ரமேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆளுநர் அறிவுறுத்தியபடி மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

அதனையடுத்து, மதிய உணவு இடைவெளிக்காக அவையை மதியம் 3 மணி வரைக்கும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.