மீதமுள்ள காலத்தை எடியூரப்பா அரசு முழுமையாக நிறைவு செய்வது சந்தேகம்தான் என்று கர்நாடக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். அதனையடுத்து இன்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது. அவையில் பேசிய எடியூரப்பா, கடந்த 14 மாதமாக கர்நாடகாவில் அரசு செயல்படவில்லை என விமர்சித்தார்.
இதனையடுத்து எடியூரப்பா தலைமையிலான அரசு தார்மீகமற்றது என்று சித்தராமையா மற்றும் குமாரசாமி விமர்சித்துள்ளனர். குமாரசாமி பேசிய போது, “14 மாதங்களாக நான் அரசை நடத்தினேன். உங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடைமை. என் மனசாட்சிக்கு பதில் சொல்ல வேண்டும். கடந்த 14 மாதங்களாக நான் செய்த அனைத்தும் ஆவணங்களாக உள்ளன. என்ன வேலைகள் நடந்துள்ளது என்பது மக்களுக்கும் தெரியும்.
உங்களுடைய எண்ணிக்கையை 105 இல் இருந்து 100 அல்லது அதற்கு கீழ் குறைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. நீங்கள் அதிகார தாகத்தில் பேசுகிறீர்கள். மக்களின் நலனுக்காக அரசுடன் ஒத்துழைத்து பணியாற்ற தயாராக உள்ளோம்” என்று பேசினார்.
சித்தராமையா பேசிய போது, “எடியூரப்பா அரசு அரசியலமைப்பு மற்றும் நீதிக்கு புறம்பானது. எடியூரப்பா அரசு இறுதிவரை நீடித்து இருக்குமா என்பது தெரியவில்லை. உங்களது ஆட்சிக்கு மக்களின் அங்கீகாரம் இல்லை. உங்களுக்கு எங்கு மெஜாரிட்டி இருக்கு?.. 105 உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் எடியூரப்பா முதலமைச்சர் ஆகியுள்ளார். அவர் எவ்வளவு நாள் முதலமைச்சராக இருக்கிறார் என்பது பொருந்திருந்து பார்க்கலாம். முழு காலமும் நீங்கள் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று கூறியுள்ளார்.