டிரெண்டிங்

“துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” - கனிமொழி

webteam

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் இருப்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என திமுக எம்.பி கனிமொழி உறுதி அளித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இதனையடுத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து மனித உரிமைகள் ஆணையம் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தியது. காயப்பட்டவர்களையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்தும் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று முடித்து வைத்தது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, “தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் பின்னணியில் அரசும் காவல்துறையும் இருக்கிறது என்று முகிலன் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் அவரே என்ன ஆனார் என்று தெரியவில்லை. இதைப்பற்றி யாரும் கேள்வி எழுப்பமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக இதற்குப் பின்னால் இருக்கக்கூடியவர்களை கண்டறிந்து தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். அது நடக்கும்” எனத் தெரிவித்தார்.