டிரெண்டிங்

“ஏதாவது ஆய்வு செய்தீர்களா? ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி

“ஏதாவது ஆய்வு செய்தீர்களா? ”- 10% இடஒதுக்கீடு குறித்து கனிமொழி கேள்வி

webteam

பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது என எந்த அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுத்தது என திமுக எம்.பி கனிமொழி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 10 சதவிகித மசோதாவுக்கு எதிராகா மக்களவையில் நேற்று அதிமுக எம்.பி தம்பிதுரை கடுமையாக பேசினார். 4 மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேறியது.

இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் திமுகவும், அதிமுகவும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, அதிமுக எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுக சார்பில் தொடர்ந்து வாதாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவது என எந்த அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுத்தது என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

மேலும் நாட்டிலேயே சமூகநீதியை முன்னெடுத்து சென்றதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என பெருமிதம் தெரிவித்த கனிமொழி எக்காரணம் கொண்டும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு கூடாது என வலியுறுத்தினார்.

10% இட ஒதுக்கீடு என்பதை எப்படி முடிவு செய்தீர்கள் எனவும் ஏதாவது ஆய்வு செய்தீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல்வேறு கமிஷன்களின் பரிந்துரையின் படியும் அறிவியல் ரீதியிலான ஆய்வுகள் படியும் இட ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார். மேலும் மண்டல கமிஷனும் இதே ரீதியில் தான் இட ஒதுக்கீடு அளவை முடிவு செய்தது எனவும் ஆனால் நீங்கள் எப்படி 10% இட ஒதுக்கீடு என்ற முடிவுக்கு வந்தீர்கள்? எனவும் கனிமொழி வினவினார்.