மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு கட்சிகள் மும்முரமாக வேலையை தொடங்கி தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் அக்கட்சியிடம் விருப்ப மனுக்களையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
இரண்டாவது முறையாக தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வகித்து வரும் கனிமொழியின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 6 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட தூத்துக்குடி மக்களவை தொகுதியில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் தற்போது திமுக வசம் உள்ளது.
இதனிடையே தூத்துக்குடி தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை கனிமொழியும், அவரை எதிர்த்து தமிழிசையும் போட்டியிட்டால் அத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக மாறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.