பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பதிவிடப்பட்ட கருத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் அவரின் செயல்பாட்டை திமுக எம்.பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
நடிகரும், பாஜக ஆதரவாளருமான எஸ்.வி.சேகர் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசும் விதத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பதிவிடப்பட்ட கருத்திற்கு நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுகவின் எம்.பி கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் “ஊடகத்துறையில் உள்ள பெண்கள் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்.வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டியது. மற்றொருவரின் பதிவை நான் பகிர்ந்தேன் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அந்த முகநூல் பதிவு, அருவருக்கத்தக்க மனநிலையையே காட்டுகிறது. இப்படிப்பட்ட பதிவுகளை போட்டு விட்டு கண்டனம் எழுந்ததும் நீக்குவது தொடர்கதையாகி வருகிறது. பிஜேபி தலைமை எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், இத்தகைய கருத்துக்களுக்கு அவர்களும் உடன்படுகிறார்கள் என்றே பொருள் கொள்ள முடியும். இத்தகைய கருத்துகள், அவர்களின் தனிப்பட்ட கருத்துகள் என்று கூறி விட்டு அவரை கட்சியில் தொடர அனுமதிப்பது தவறு. அனைத்துப் பெண் பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.