டிரெண்டிங்

கனிமொழி கைதாகி விடுதலை

கனிமொழி கைதாகி விடுதலை

Rasus

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ‌நெல்லையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த கெடு மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தும், மத்திய அரசு இன்னும் ஆணையத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது. இதனிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி பல கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதனிடையே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திருமாவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், கோரிக்கை நிறைவேறும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றார். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் சில மணி நேரங்களில் போலீசார் அவர்களை விடுதலை செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ‌நெல்லையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே நடந்த போராட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவு‌டையப்பன், மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் திமுகவினர் பங்கேற்றனர். காவிரி மேலாண்மை வா‌ரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறையினர், பின்னர் விடுவித்தனர்.

முன்னதாக கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதாக கனிமொழி குற்றம்சாட்டினார். நெல்லையில் செய்தியாளரி‌டம் பேசிய அவர், மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு துணை நிற்பதாக விமர்சித்தார்.