அபிநந்தன் நாடு திரும்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் பயங்கரவாத தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்திய பிரதமர் மோடியும் இத்தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்தார்.
அதன்படி பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில் இந்திய விமானப் படை ‘மீராஜ் 2000’ ரக போர் விமானங்களை கொண்டு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்திய விமானப் படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் போர் கைதியாக சிக்கினார். அவரை இன்று விடுவிக்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில், அபிநந்தன் நாடு திரும்பிவிட்டார் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அண்டை நாட்டிற்கு நன்றி எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கலை வியாபாரம் ஆகிவிட்ட பிறகு அது வாழும் ஆனால் வளராது எனக் குறிப்பிட்டார். மய்யம் என்பது சங்கரரின் அத்வைதமும் வள்ளுவரின் நடுநிலைமையும்தான் எனவும் ஆசியாவில் மய்யத்தை முன்னெடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளது எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.