டிரெண்டிங்

"அவர்களுக்குப் பொருந்தாது!" - 'ஜல்லிக்கட்டு நாயகன்' கருத்துக்கு கமல் பதிலடி

Sinekadhara

"உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி" என்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியதற்கு, "அந்த ஜோடி செருப்பு, அவர்களுக்கு சேராது" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

மதுரையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு கோயம்புத்தூரில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்த கமலஹாசன் அளித்த பேட்டி:

'மக்கள் நீதி மய்யம் ஒரு சூப்பர் நோட்டா' என்று கார்த்திக் சிதம்பரம் கூறியது..?

"ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறலாம். சிந்தித்து சொல்வது சிறந்தது; நான் அப்படித்தான் செய்கிறேன்."

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடப்பது குறித்து...

"இது ஒரு மிரட்டல் யுக்தியாகத்தான் இருக்கும். நியாயமான முறையில் வருமான வரித்துறை சோதனை நடக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து செய்யவேண்டும். பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது மத்திய அரசின் மிரட்டல் போக்காகத்தான் உள்ளது."

தேர்தல் நேரத்தில் அதிகமாக வேட்பாளர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவது குறித்து...

'மக்கள் அனைவருக்கும் வருகின்ற நோய்தான். இவர்களும் மக்களில் ஒருவர்தானே. பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்."

உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடி என்று துணை முதல்வர் கூறியிருப்பது...

"அந்த ஜோடி செருப்பு, அவர்களுக்கு சேராது. அவரவர் கால்களுக்கு ஏற்றதுதான் அவரவர் போடவேண்டும்."

மக்கள் நீதி மய்ய பிரசார வியூகம் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது?

"அற்புதமாக சென்று கொண்டிருக்கிறது. வரவேற்பு அமோகமாக உள்ளது."

தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி உண்மையான அன்பு வைத்திருக்கிறார் என்று தமிழக முதல்வர் கூறியிருப்பது...

"அப்படி என்றால் அவர்கள் வெளிநடப்பு செய்திருக்கக்கூடாது. இலங்கைத் தமிழர்கள், தமிழர்கள் என்று வெவ்வேறாக பார்க்கிறார்கள். அது அவர்களுக்குப் புரியும்போது புரியும்."

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு தற்காலிகமே. பிறகு சாதிவாரியாக கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஓபிஎஸ் கூறியது குறித்து...

"அதைத்தான் நான் எப்போதும் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். தற்போது ஐயா ஓபிஎஸ்ஸுக்கு புரிந்தது சந்தோஷம்."