டிரெண்டிங்

“இது தமிழகத்தின் தலையெழுத்தை முடிவு செய்யும் தேர்தல்” - கமல்ஹாசன்

webteam

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

கமல்ஹாசன்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில் தான் போட்டியிடவில்லை என்று அவர் அறிவித்தார். கொல்கத்தா செல்லும் முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், என் கொல்கத்தா பயணம் அரசியல் ரீதியானது. மம்தாவை சந்திக்கவே அங்கு செல்கிறேன். சந்திப்புக்கான காரணத்தை வந்து சொல்கிறேன் என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை கமல் ஹாசன் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்ட இ‌ச்சந்திப்பு‌க்கு பின்னர் திரிணாமுல் காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தரும் எ‌ன கமலஹாசன் தெரிவித்தார். இதன்‌படி அந்தமானில் உள்ள ஒரு மக்களவை தொகுதியில் திரிணாமுல் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தர உள்ளது. 

மம்தாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்புகையில். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்‌தித்த கமல், தமிழகத்திற்கு நல்லது செய்யும் பிரதமர் வேண்டும் எனவும் தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும்  “இது வெறும் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தலாக மட்டும் பார்க்கவில்லை. இந்த தேர்தல் நம்முடைய தலையெழுத்தையும் முடிவு செய்யும். அதற்கான அஸ்திவாரம்தான் இது. பிரதமர் யார் வந்தாலும் தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களாக வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. அதில் எங்கள் உரிமைகளை கேட்டு வாங்க வேண்டியது எங்களது கடமை” எனத் தெரிவித்தார்.