டிரெண்டிங்

‘மீ டூ’ பற்றி கேலி செய்ய வேண்டாம் - கமல்

webteam

‘மீ டூ’ பற்றி எப்போ சொன்னா என்ன, அதை கேலி செய்ய வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். 

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மீ டூ என்ற ஹேஸ்டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் தைரியமாக வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் பரவி வந்த இந்த மீ டூ தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. 

தமிழகத்தில் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது எழுப்பிய பாலியல் புகாரால் மீ டூ பிரபலமானது. சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கழித்து இதை சின்மயி வெளியிட்டதால் அவருக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. மேலும் பலர் ஆதரவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மீ டூ வை கேலி செய்ய வேண்டாம் எனவும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் குறித்து விழிப்புணர்வு இசை ஆல்பம் வெளியிட வேண்டிய சூழல் வருத்தம் அளிப்பதாகவும் பேசினார். 

மேலும் இதை ஏன் இப்போது சொல்கிறார்கள்? அப்போதே சொல்லவில்லை என்றெல்லாம் கேட்க வேண்டாம் எனவும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தைரியமாகவும் நியாயமாகவும் எழுந்துள்ள குரல் இன்னும் எழட்டும் எனவும் உடன்கட்டை ஏறுவது தவறு என்பதை 200 வருடங்களுக்கு முன்பு சொன்னதும் சரிதான் இப்போது சொன்னாலும் சரிதான் என சுட்டிக்காட்டினார்.