"மத நல்லிணக்கத்துக்கு எதிரான நடவடிக்கையை முறியடிக்கவே கோவையில் போட்டியிடுகிறேன்" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “கோவையில் எனது பழைய நினைவுகள் அதிகம். நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இது எனக்கு மிகவும் பிடித்த ஊர். அதுமட்டுமில்லாமல் இங்கு மத நல்லிணக்கம் இல்லாமல் ஆக்குவதற்கு நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை முறியடிக்க வேண்டும். மீண்டும் கோவையை சீரமைத்து கொண்டு வர வேண்டும். இதனால் இங்கு போட்டியிட முடிவு செய்தேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “என்னை அவுட்சைடர் என்று சொல்லமாட்டார்கள் என்று நினைக்கிறேன். வெளி மாநிலங்களில் இருந்துகூட இங்கு தலைவர்கள் வந்திருக்கிறார்கள். நான் தமிழன். அதனால் சொல்ல வாய்ப்பில்லை. அவ்வாறு சொன்னால் அது வேறு கட்சி சார்பான ஊடக உந்துதலாகக்கூட இருக்கலாம்” என்றார் கமல்ஹாசன்.