டிரெண்டிங்

தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்!

தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்!

webteam

தமிழகத்தில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக கூறியுள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் தி குயின்ட் இணையதளத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ’சமீபத்தில் நான் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, கம்யூனிஸ்டு கட்சியில் இணையப்போவதாக கூறினர். பல கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் பிற கட்சிகளில் சேரும் எண்ணம் இல்லை. அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்தே இந்த மாற்றத்தை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏன் தமிழகம் என்று கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்கலாம் என்று நினைக்கிறேன். அதேநேரம், மாற்றத்தை கொண்டு வர எவ்வளவு தாமதம் ஆனாலும் பரவாயில்லை. என்னை சந்தர்ப்பவாதி என்று சொல்லலாம்.

நான் சந்தர்ப்பவாதிதான். இதுதான் தீவிர அரசியலில் ஈடுபட சரியான வாய்ப்பு. காரணம் அனைத்துமே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. 
நமக்கு சிறந்த அரசு தேவைப்படுகிறது. நான் அவசரகதியில் தீர்வுகள் கிடைத்துவிடும் என சொல்லவில்லை. மாற்றத்தை முன்னெடுத்து செல்வேன். இது என் வாழ்நாளில் கூட நிறைவேறாமல் போனாலும் எனக்கு பின் வருபவர்கள் வழி நடத்திச் செல்வார்கள். அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனிக்கட்சிதான் தொடங்குவேன். இந்த நிகழ்வு எனது விருப்பத்தின் படி நடக்கப்போவதில்லை, கட்டாயத்தின்பேரில் நடக்க இருக்கிறது.

ஏனெனில் எனது கொள்கைகளுடன் எந்த கட்சியின் சித்தாந்தங்களும் முழுமையாக பொருந்தவில்லை. இந்தியாவில் அரசியல் அமைப்பு தோல்வி அடைந்து விட்டதால், இதில் மாற்றம் வரவேண்டும், ஊழல் இல்லாத நிலை உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முதல்வராக தேர்ந்து எடுக்கப்படும் ஒருவர் சிறப்பாக செயல்படாவிட்டால் அடுத்த 5 ஆண்டுகள் காத்திருந்துதான் ஓட்டுப் போட்டு மாற்றும் நிலை மாற வேண்டும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் உடனே அவர்களை மாற்ற வழிவகுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அரசியலில் நல்ல மாற்றம் ஏற்படும். ஊழல் இருக்காது சரியான நேரம் அமைந்தால் மாற்றம் தொடங்கும். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டன. ஊழல் இருக்கும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது’என அவர் தெரிவித்துள்ளார்.