கர்நாடக தேர்தல் முடிந்தால் யாரையாவது உண்ணாவிரதம் நடத்தச் சொல்லி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கொள்கை விளக்க கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார். காவிரி பிரச்னையில் நூற்றாண்டுகளாக தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும் எனப் பேசினார். காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு எனவும் விமர்சித்தார்.உண்ணாவிரதத்தில் நம்பிக்கையில்லை; உண்ணுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.நீருக்காக கெஞ்ச வைத்துவிட்டது மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் இருக்கும் மாநில அரசு என கடுமையாக சாடினார்.இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் என்பது எனது கனவு.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழகம் அமைதியாக ஒத்துழைக்க மறுக்கும் என்றார்.காவிரி விவகாரத்தில் அரசியல் சூழ்ச்சி வேண்டாம்; நேர் கொள்வோம், எதிர்கொள்வோம் காவிரி பிரச்னையில் தீர்வை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது என்றார்.யாரையாவது உண்ணாவிரதமோ, ஊர்வலமோ நடத்தச் சொல்லி கர்நாடக தேர்தல் முடிந்ததும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார்கள்.உடல்நலம் மற்றும் மக்கள்நலன்தான் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என கூறினார்.