கமல்ஹாசன் முன் ஜாமீன் மனு குறித்து திங்கள் கிழமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்க உள்ளது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தேர்தல் பரப்புரையின்போது கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, கமல்ஹாசனை கைது செய்து விசாரிக்க ஏதேனும் அவசியம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு குற்றவியல் வழக்கறிஞர், சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். ஒருவேளை அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
திருப்தி இல்லை என்றால் தான் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தற்போது சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளதால் மனுதாரர் அச்சப்படத் தேவையில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், கமல்ஹாசன் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்குகிறது.