டிரெண்டிங்

மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா?

மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வா?

rajakannan

மத்தியப் பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமாக உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் 114 இடங்களை கைப்பற்றியுள்ளது. பாஜக 109 இடங்களில் வெற்றி கண்டுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சமாஜ் வாதி 1 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

ஆட்சியமைக்க 116 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ், சமாஜ் வாதி ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக பகுஜன் சமாஜ் அறிவித்துள்ளது. 

இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பலம் 117 ஆக அதிகரிக்கும். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க சிக்கல் எதுவும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோராது என முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 

ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில், மத்திய பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது. முதலமைச்சருக்கான போட்டியில் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. ராஜஸ்தானிலும் இதே நிலைதான். சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையே போட்டி நிலவுகிறது. 

        
 
இதனையடுத்து, மத்தியப் பிரதேசம் காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் இறுதி செய்யும் என்று மாநில காங்கிரஸ் தரப்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் யார் என்பதை ராகுல் காந்தி முடிவு செய்வார் என்று சிந்தியா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.