கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைக் கேட்டால், துணை வேந்தரை அனுப்பியுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். சூரப்பா பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவர் பணியில் இருப்பார். தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நேரத்தில் அண்ணா பல்கலைகழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்தவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், “ கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?” என்று கூறியுள்ளார். அத்துடன் காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் நம்மை தூண்டிவிடுகிறது என்றும், அதனால் நாம் எதிர்வினையாற்றுகிறோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் கர்நாடகாவை சேர்ந்த நாகேஷ் எனது குரு, சரோஜா தேவி, ராஜ்குமார், ரஜினிகாந்த், அம்பரீஷ் ஆகியோர் எனது சொந்தம். இதையும், துணைவேந்தர் நியமனத்தையும் மத்திய, மாநில அரசுகள் ஒப்பிட கருதினால் அது நகைச்சுவையாகும். எப்படியிருந்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் தான் வேண்டும் என்று கமல் குறிபிட்டுள்ளார்.