தலைவராக வேண்டும் என கூறும் கமல்ஹாசன் தொடர்ந்து ட்விட்டரில் கருத்து கூறி வருகிறார். ஆனால் அவர் எழுதும் மொழி நடை பொதுமக்களுக்கு புரியாமல் இருக்கிறது என பலரும் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
கமல் ட்விட் போடுவதும் அன்றைய நாளே அது ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவதும் தமிழ்நாட்டின் தற்கால அரசியல் நிலைமையாக மாறியிருக்கிறது. அவர் போடும் கருத்துக்களை மதுரை பேரகராதி கொண்டு அலசினால் கூட பொருள் கொள்ள முடியாது போல. சென்னை பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் லெக்சிகனை வைத்து வரிக்கு வரி பார்த்து பொருள் சொல்ல முயன்றால் கூட புரியும் படி விளக்கம் கிடைக்காது போல.
அவர் இன்று வெளியிட்டிருக்கும் ட்விட்டில் ஏக குழப்பம் நிலவுகிறது. “அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.” என்று கூறியிருக்கிறார்.
இதனை படித்த சிலர் அகில இந்திய விவசாயிகள் கட்சி என தனது கட்சிக்கு புதியதாக பெயர் சூட்டிவிட்டார் கமல் என்று சமூக வலைதளத்தில் கருத்திட்டு பரப்பி வருகிறார்கள். பலர் உறுப்பினராக இணைய அழைப்பு விடுத்திருக்கிறார் என பொருள் கொண்டு உரை எழுதி வருகிறார்கள். பொது ஊடகத்தில் இப்படி புரியாமல் கமல் போடும் கருத்துக்கள் தவறான புரிதலை உருவாக்கி வருவதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும் என பலர் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
இதற்கு முன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கமல் புரியும்படி பேச வேண்டும் என்று கருத்து கூறியிருந்தது கவனத்திற்குரியது.