டிரெண்டிங்

முன்ஜாமின் கோரி கமல்ஹாசன் மனுத்தாக்கல்

webteam

முன்ஜாமின் கோரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தேர்தல் பரப்புரையின்போது கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் மீது நடவடிக்கை கோரி, இந்து முன்னணி நிர்வாகி அளித்த புகாரின்போரில், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தம் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமது மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் விடுமுறைக்கால அமர்வில் கமல்ஹாசன் தரப்பில் முறையிடப்பட்டு இருந்தது. 

ஆனால் விடுமுறைக்கால அமர்வு, ஒரு வழக்கை தள்ளுபடி செய்யவோ, தடை விதிக்கவோ இயலாது என கூறிய நீதிபதி, தேவைப்பட்டால் மனுதாரர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தமக்கு முன்ஜாமின் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனது பெயருக்கும், பொது வாழ்வுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் நோக்கத்திற்காகவும் தமது பேச்சு தவறுதலாக பகிரப்பட்டு வருவதாக கூறியுள்ளார். 

மேலும் தமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் ஒருவர் தமது நாக்கை வெட்டுவேன் என பேசியுள்ளதாக தெரிவித்துள்ள கமல்ஹாசன், வரலாற்று ரீதியிலேயே தாம் அவ்வாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மத பிரச்னையை தூண்டும் வகையிலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ தாம் பேசவில்லை என்றும் மனுவில் விளக்கம் அளித்துள்ள கமல், தமக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இம்மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.