வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அது போதாது எனக்கூறி தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. நேற்று இரவு முதல் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஸ்டிரைக் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், “தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.