கமல்ஹாசன் தனது ட்விட்டர் முகப்பு படமாக பாரதி கெட் அப்பில் தன்னை வரைந்து வைத்துள்ளார். அந்தப் படம் தற்சமயம் சமூக வலதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தமிழ்கவிஞன் மகாகவி பாரதி தன் வாழ்நாளில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மொத்தம் ஐந்துதான். அதில் அவர் வால்விட்ட தலைப்பாகையுடன் இருக்கும் புகைப்படம் மிகவும் பிரபலம். அந்தப் படத்தை நகல் எடுத்ததை போல தன் முகத்தை மாற்றி புதிய பாரதி கெட் அப்பில் கமல்ஹாசன் மாறி இருக்கிறார். அத்துடன் சென்னை மாநகராட்சியில் நடந்த ஊழல் சம்பந்தமான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 2015-2016ல் சாலைப் பராமரிப்புக்காக மட்டும் 350 கோடி ஒதுக்கியதாகவும் அதில் மந்தவெளியில் உள்ள தேவநாதன் தெருவில் நடக்காத சாலை மராமத்து பணிகளுக்கு மட்டும் 27 லட்சம் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் விவரிக்கிறது. மேலும் ஆதாரங்கள் தொடரும் என்றும் வீடியோ குரல் முடிகிறது. இதை தனது ட்விட்டரில் கமல் எடுத்து காட்டி “அறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் உள்ளதாம் பல ஆதாரங்கள் ” என்று புதிர் வைத்துள்ளார்.
கொள்ளையர்கள் நாடாளக் கூடாது என கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில் அதில் உண்மையில்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமட்டோம் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலடி தந்துள்ளது வீடியோ. இந்த வீடியோ விவகாரம் போலவே கமல் பாரதி தோற்றமும் பரபரப்பாகியிருக்கிறது. அவரை பாராட்டியும் கேள்வி எழுப்பியும் பலர் கருத்திட்டு வருகின்றனர்.