இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதில்லை என்று கமல்ஹாசன் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரம் அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார். அப்போது அவர் வருகைக்காக ஏற்பாடாகி இருந்த ‘நம்மவர் சந்திப்பு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ராமேஸ்வர மீனவர்கள் தங்களின் கோரிக்கையை மனுவாக அவரிடம் அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட நடிகர் கமல், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் ‘அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்காத நீங்கள், அவரது இல்லத்தில் இருந்து கட்சியை தொடங்குவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல், “நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அது என்னுடைய நம்பிக்கை” என்று குறிப்பிட்டார்.
கமல் இவ்வாறு சொன்னது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவரது குருநாதர் இயக்குநர் ஆர்.சி. சக்தி மறைந்த போது அவரது வீட்டிற்கு வருகை தந்த கமல் அவரது உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினார். கூடவே ‘உடலை எடுக்கும் போது செய்தி சொல்லுங்கள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மயானம் வரை வந்திருந்தார். அதேபோல ஆச்சி மனோரமா மறைவிலும் கலந்து கொண்டார். பத்திரிகையாளர் வல்லபன் மறைவுக்கு வந்த அவர் பல மணிநேரம் அமர்ந்திருந்தார். இதை எல்லாம் விட நடிகர் திலகம் சிவாஜியின் மறைவில் பங்கேற்று இறுதி வரை இருந்தார். அதைபோலவே நடிகர் நாகேஷ் மறைவுக்கு அவர் வந்து கலந்து கொண்ட நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளது.
உண்மை இவ்வாறு இருக்க கமல் ஏன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையோடு வாழ்கிறேன் என்று சொன்னார் என்பது குழப்பமாக உள்ளது.