நடிகர் கமல்ஹாசன் குழப்பத்தில் இருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். கருப்புக்குள் காவியும் அடக்கம் என்று கூறியதன் மூலம் கமல்ஹாசன் பயங்கர குழப்பத்தில் இருப்பது தெளிவாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரியார் மணியம்மை மருந்தியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு வந்த கி.வீரமணி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், அக்ரஹாரத்தில் இருந்து பெரியார் திடலுக்கு வந்தவர் தனிக்கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “18 வயது நிரம்பிய, பைத்தியம் பிடிக்காதவர்கள் யார் வேண்டுமானாலும் தனிக்கட்சி தொடங்கலாம்” என்றார். நீட் தேர்வு முழுமையாக தடை செய்யப்படும் வரை போராட்டங்கள் தொடரும். ஒரே ஒரு முறை தேர்வு நடைபெற்றுவிட்டதால் இனி தொடர்ந்து நீட் தமிழகத்தில் நடத்தப்படும் என அர்த்தமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாற்றி மாற்றி பேசும் தமிழக அமைச்சர்களை உண்மை கண்டறியும் கருவியை வைத்து சோதிக்க வேண்டும் என்றும், அரசியல் சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த தமிழக அமைச்சரவை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரின் கேள்வியாக இருப்பதாகவும் கி.வீரமணி தெரிவித்தார்.