டிரெண்டிங்

“சசிகலாவிடம் கேட்டு முடிவெடுக்கத் தயார்” - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

webteam

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்தது. 

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும், எனவே சபாநாயகர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டுமெனவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், 3 எம்.எல்.ஏக்களில் ஒருவரான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது, “சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். தடை கோரி நீதிமன்றம் செல்ல விருப்பமில்லை. ரத்தினசபாபதியும், கலைச்செல்வனும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக பேட்டி அளித்துள்ளனர். அது அவர்களுடைய வழி.

என்னுடைய செயல்பாடுகள் சரி என்று எனக்கு தெரிகிறது. நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. நான் இருப்பது அண்ணா திமுக தான். அதிமுகவின் ஒரு அணியாக இருக்கக்கூடிய அமமுகவுடன்தான் நான் இருக்கிறேன் எனும் போது வழக்கு போடவேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. நான் விளக்கம் கொடுக்க தயார். இதில் எந்த தவறும் நடக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தும் தவறு நடந்தால் சசிகலாவிடம் கேட்டுவிட்டு முடிவெடுக்க தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.