முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏவான கலைச்செல்வன் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் டிடிவி தினகரன் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைய வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடத்தினாலும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என எம்.எல்.ஏ கலைச்செல்வன் தெரிவித்திருந்தார். சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் தந்தபோது ஆதரவு கேட்டு கொறாடா கடிதம் அனுப்பினார் எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக திரும்பப் பெற்றாலும் எனது ஆதரவு அரசுக்கே எனவும் கலைச்செல்வன் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நேற்று அதிருப்தி எம்.எல்.ஏவாக இருந்த ரத்தினசபாபதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏவான கலைச்செல்வன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கலைச்செல்வன், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் வந்தேன். தலைமை மீது யாருக்கும் கோபம் இல்லை. ஆட்சி கலைப்புக்கு யாரும் உடன்படமாட்டார்கள். எந்த இடத்தில் இருக்கிறார் என அறிந்து டிடிவி தினகரன் ஒதுங்கி கொள்ள வேண்டும். முதலமைச்சர் பழனிசாமி சொல்வதை கேட்டு செயல்படுவோம். மக்களுக்கான திட்டங்கள் சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களவை தேர்தல், இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டிவிட்டார்கள். ஆட்சியை கலைக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறுவதை நாங்கள் உடன்படவில்லை. அதிமுகவின் நன்மை கருதி மாவட்டத்தில் இருக்கும் பிரச்னைகளை ஒதுக்கி வைத்து விட்டோம்” எனத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன். இவர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூவரின் மீது சபாநாயகரிடம், கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள் 3 பேரும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக் கோரி, சபாநாயகர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கிடையே, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர, பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தன்மீது நடவடிக்கை எடுக்ககூடாது என்று உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.ஏ கலைச்செல்வன் மனுத் தாக்கல் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.