இயற்கையாக மலர்ந்தால்தான் மலருக்கு மரியாதை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “தமிழகத்தில் தண்ணீரே இல்லை. புல் கூட முளைக்காத நிலையில், தாமரை எப்படி மலரும்” என்று விமர்சித்தார்.
இதற்கு ட்விட்டரில் பதிலளித்த தமிழிசை, “இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து, தாமரை மலர செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு ட்விட்டரில் பதில் தெரிவித்த ஸ்டாலின், “சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலினுக்கு பதிலளித்திருந்தார். அதில், “அதிகாலையில் சூரியன் உதிப்பதற்குள் இதழ்விரித்து தாமரை மலர்கிறது. இது அன்றாட நிகழ்வு. மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும். சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும், குளத்து நீரில் மிதக்கும் தாமரையை கருகச்செய்யாது, கருகச்செய்யவும் முடியாது. இது இயற்கை நியதி” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் செயற்கை மழை வரவழைத்து தாமரையை மலர வைப்போம் என்று கூறிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலளித்துள்ளார். அதாவது, இயற்கையாக மலர்ந்தால்தான் மலருக்கு மரியாதை என அவர் தெரிவித்துள்ளார்.