தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு முன் ஜாமீன் வழங்கி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டி விலக்கு அருகே, கடந்த 12-ஆம் தேதி பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக காரில் வந்த அமைச்சர் கடம்பூர் ராஜு சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, அதிகாரிகளை ஒருமையில் பேசி மிரட்டியதாக காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.
அதில், முன் ஜாமீன் கோரி அமைச்சர் கடம்பூர் ராஜு தாக்கல் செய்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்காததோடு, தேர்தலையொட்டி நிபந்தனைகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை எனக்கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நிபந்தனையற்ற முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.