டிரெண்டிங்

ஆர்.சி.பி.யின் கோப்பை கனவை தகர்த்த பட்லர்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்

நிவேதா ஜெகராஜா

பட்லரின் அதிரடி சதத்தால் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. சுமார் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி அபாரப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டம் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய விராட் கோலி 7 ரன்களிலும், கேப்டன் டூ ப்ளஸ்சி 25 ரன்களிலும் ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில் கடந்த முறை எலிமினேட்டர் ஆட்டத்தில் அசத்தலான சதம் விளாசிய ரஜத் படிதார், இம்முறையும் நேர்த்தியாக விளையாடினார்.

மறுமுனையில் மேக்ஸ்வெல் 13 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார். அரைசதம் கடந்த படிதார், 58 ரன்களில் ஆட்டமிழந்தார். ராஜஸ்தான் அணியில் பிரசித் கிருஷ்ணா, மெக்காய் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.

இறுதிப் போட்டிக்கு முன்னேற 158 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணி 5 ஓவர்களில் 60 ரன்களைக் கடந்த நிலையில், ஜெய்ஷ்வால் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஜோரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜோஸ் பட்லர்.

அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்த நிலையில், சாம்சன் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். வெற்ற்றியை நெருங்கிய நிலையில் படிக்கல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரன்மழை பொழிந்த பட்லர் சதம் விளாசி அசத்தினார். நடப்பு தொடரில் நான்காவது சதத்தைப் பதிவு செய்த அவர், ஒரு தொடரில் அதிக சதங்கள் விளாசிய விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்தார்.

3 விக்கெட்களை இழந்த நிலையில் ராஜஸ்தான் அணி 19ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியுடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.