நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளதால் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியுள்ளன. பல அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணி வியூகங்களையும் அதற்கு அட்சாரமாக அரசியல் பொதுக்கூட்டங்களையும் நடத்திவருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அஇஅதிமுக தங்கள் தரப்பு தேர்தல் குழுக்களை அறிவித்துள்ளன. குறிப்பாக அதிமுக 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுக்களை பெறும் அளவிற்கு தேர்தல் பணிகளில் தீவரம் காட்ட ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனுடன் புதிய தலைமுறை ஒரு சிறப்பு நேர்காணலை நடத்தியது. அதில் பங்குப்பெற்று பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு தங்கள் தரப்பு விளக்கத்தை முன்வைத்தார். அதில் சில...
அமமுக தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டதா?
“தேர்தல் வருவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. மேலும் எங்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேர்தல் வேலைகளில் எப்போதும் மிகப் பக்குவமாக செயல்படவேண்டும்.”
ஜெயலலிதா பாணியில் அமமுக தேர்தல் பணிகளை செய்யவில்லையே?
“ஜெயலலிதாவின் வழி அவருடன் முடிந்துவிட்டது. தற்போது தேர்தலக்கு முன், கட்சிகளுடன் கூட்டணி பேசி பக்குவமாக இணைந்து சென்றால்தான் தேர்தலில் வெல்ல முடியும்.”
பாஜக வேட்பாளர்களான ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் அமமுக ஆதரவு கொடுத்தது மாதிரி இந்தத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி உண்டா?
“ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களில் பாஜகவின் வேட்பாளர்கள் வெற்றிபெறும் நிலையில் இருந்ததால் நாங்கள் ஆதரவு கொடுத்தோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் பெரும்பான்மையில் இருந்தாலும் அமமுக ஆதரவு தறாது.”
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைகிறார் எனச் செய்திகள் வெளிவந்ததே?
“அவை அனைத்தும் சமூக ஊடங்கங்கள், பத்திரிகைகள் பரப்பும் வதந்தி. நான் எப்போதும் அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவன். இரட்டை இலை சின்னத்தை பெறுவதுதான் எனது இலக்கு. திமுகவில் சேரும் எண்ணம் எனக்கில்லை.”
அமமுகவும் அதிமுகவும் இணைய வாய்ப்பு இருக்கிறதா?
“தேர்தலில் அமமுக பெறுவாரியான இடங்களில் வெற்றிப் பெற்றால் அதிமுக தொண்டர்கள் எங்களுடன் வந்து இணைவார்கள். அதேபோல திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் அமமுக மற்றும் அதிமுக இணைந்துவிடும். ஏனென்றால் அதிமுகவில் இப்போது இருக்கும் தலைவர்கள் தேர்தலில் தோல்விக்குப் பின் ஒதுங்கிவிடுவார்கள். அதன்பிறகு அதிமுக தொண்டர்கள் அமமுகவில் வந்து இணைவார்கள்.”
தங்க தமிழ்ச்செல்வன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா?
“நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தொகுதி தேர்தல் வந்தால் நான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவேன். அப்படி சேர்ந்துவராமல் நாடாளுமன்றத் தேர்தல் மட்டும் வந்தால் சூழ்நிலையை பொருத்தே என் முடிவு மாறுபடும்.”
அதிமுக; பாஜக இடையே கூட்டணி மலருமா?
“அதிமுக, பாஜக இடையே கட்டாயம் கூட்டணி அமையும். அப்படி அமையாவிட்டால் அதிமுக இன்னும் பெரிய நெருக்கடியை சந்திக்கும். ஏனென்றால் பாஜகவினால் கோடநாடு விவகாரம், ரைடுகள் போன்ற நெருக்கடிகளை அதிமுக சந்தித்து வருகிறது. அந்தவகையில் கூட்டணி அமையாவிட்டால் நெருக்கடிகள் அதிகமாகும்.”
இவ்வாறு அவர், பல கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.